சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறை : ராஜ்நாத் சிங் பேச்சு

தினகரன்  தினகரன்
சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறை : ராஜ்நாத் சிங் பேச்சு

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாட்டின் கூட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி மக்களவையில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வன்முறையை ஒடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் மாநில அரசுகள் தான் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டிலேயே 1984ம் ஆண்டு  அக்டோபரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் நிகழ்த்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தான் மிகப்பெரிய வன்முறையாகும். பாதிக்கப்பட்ட சீக்கிய மக்களுக்கு நீதி கிடைக்க சிறப்புபுலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. யாருக்கு எதிராக நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள்? பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பல ஆயிரம் பேர் சமையல் காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்.  எதிர்கட்சிகள் ஒருவரை ஒருவர் நம்புவது கிடையாது. அவர்கள் தலைமையை பற்றி பேசவரும்போது அவர்களது சக்தியை இழந்துவிடுகின்றனர். கேரளா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பிடித்து இடங்களில் பாஜ வெற்றி பெற்று அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளது.  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேவையான உறுப்பினர்கள் உள்ளபோதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது அதிருப்தி அளிக்கிறது. கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை பாஜ எதிர்கட்சியாக இருந்துள்ளது. ஆனால் ஒருபோதும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பாஜ.வுக்கு 3.33 மணி நேரம்நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேச, ஒவ்வொரு கட்சிக்கும் முன்கூட்டியே நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, தீர்மானத்தை கொண்டு வந்த தெலுங்கு தேசம் கட்சிக்கு விவாதத்தில் பேச முதலில் 13 நிமிடங்கள் வழங்கப்பட்டது. பாஜ.வுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்கள், காங்கிரசுக்கு 38 நிமிடங்கள், அதிமுக.வுக்கு 29 நிமிடங்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்கள், பிஜு ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்கள், சிவசேனாவுக்கு 14 நிமிடங்கள், தெலங்கானா ராஷ்டரிய சமிதிக்கு 9 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு மொத்தமாக 26 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. ராகுலுக்கு ஆம் ஆத்மி ஆதரவுநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல், பிரதமர் மோடியை கட்டிப் பிடித்தார். அவருக்கு மோடி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். எனினும், அவையில் பிரதமரை ராகுல் கட்டிப் பிடித்ததற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்தார். மேலும், பாஜ எம்பி.க்கள் சிலரும் இது கட்டிப்பிடிக்கும் இடமில்லை என்று கூறி சர்ச்சையை எழுப்பினார்கள். அதே நேரம், ராகுலின் செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பி.யுமான சஞ்சய் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி வெளிநாட்டு தலைவர்களை கட்டிப்பிடிக்கும்போது நாடாளுமன்றத்தில் ராகுல் கட்டிப்பிடித்ததில் என்ன தவறு இருக்கிறது?  ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலான நாடாளுமன்றத்தில் கொள்கைகள் மட்டுமே எதிர்க்கப்பட வேண்டும்; தனி நபர்களை அல்ல” என்றார்.

மூலக்கதை