அண்ணா பல்கலை பிஇ கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31 வரை கூடுதல் அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
அண்ணா பல்கலை பிஇ கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31 வரை கூடுதல் அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி:  அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிப்புக்கு இந்தாண்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ரேண்டம் எண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடந்து வருகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முந்தைய அறிவிப்பின்படி ஆன்லைனில் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. உயர் நீதிமன்றமும் அதற்கு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், கலந்தாய்வுக்கு என தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட 42 மையங்களுக்கு சென்று மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர். இதில் ஜூலை 31ம் தேதிக்குள் கலந்தாய்வு முழுவதையும் நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தை பொறுத்தமட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலில் மருத்துவ கலந்தாய்வைதான் தேர்வு செய்வார்கள். பின்னர் பொறியியல் படிப்பிற்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாடு முழுவதும் 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதனால் பிஇ கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதனால் ஆகஸ்ட் இறுதிவரை பிஇ கலந்தாய்வின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், மாணவர்களின் தற்போதைய நிலவரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூடுதல் விவரங்கள் கொண்ட மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர் சேர்க்கை விவரம் குறித்த கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஇ பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதியை ஆகஸ்ட் 31ம் தேதிவரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை