வதந்திகளால் வன்முறை நடப்பதை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி கட்டுப்பாடு : இனி 5 பேருக்கு மட்டுமே தகவல் அனுப்ப முடியும்

தினகரன்  தினகரன்
வதந்திகளால் வன்முறை நடப்பதை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி கட்டுப்பாடு : இனி 5 பேருக்கு மட்டுமே தகவல் அனுப்ப முடியும்

புதுடெல்லி: வதந்தி மற்றும் போலி செய்திகளால் பொதுமக்கள் அடித்து கொல்லப்படுவதை தடுக்க, இந்தியாவில் வாட்ஸ் அப் செய்திகளை அனுப்புவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். வாட்ஸ் அப் மூலம் சமீபகாலமாக போலி ெசய்திகள், வதந்திகள் அதிகளவில் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, மற்ற நாடுகளை விட இந்தியாவில் வதந்திகள் பரப்பப்படுவது அதிகளவு உள்ளதாக புகார் கூறப்பட்டது. கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு சிறுவர்களை கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிய வதந்தியே காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும், மத்திய அரசு நேற்று முன்தினம்,`அச்சுறுத்தும் செய்திகளை பரப்ப உதவ வேண்டாம். இதுபோன்ற செய்திகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வகையிலான செய்திகளை பரப்புபவர்களை அடையாளம் காண வேண்டும்’ என வாட்ஸ் அப்-க்கு கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த 3 வாரங்களில் மத்திய அரசு 2வது முறையாக இத்தகைய நோட்டீசை அனுப்பியது. இதையடுத்து, வாட்ஸ் அப் நிர்வாகம் இந்தியாவில் தனது சேவைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்தில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் அதிக படங்கள், செய்திகள், வீடியோக்களை பிறருக்கு அனுப்புகின்றனர். இதனால் சோதனை முயற்சியாக வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதன்படி, ஒரே நேரத்தில் 5 செய்திகளை மட்டுமே இனி பிறருக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக செல்போன்களில் மீடியா மெசஜ் பட்டனுக்கு அருகில் உள்ள குயிக் பார்வர்டு பட்டன் நீக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தேர்தல் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைவரும் தேர்தல்களில் வாட்ஸ் அப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவம் அந்த நிறுவனம் இந்திய தேர்தல்  ஆணையத்துக்கு உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இ மெயிலில் அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: `வாட்ஸ் அப்’ சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலின்போது வாட்ஸ் அப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், பிரேசில் மற்றும் மெக்சிகோ தேர்தலில் பயன்படுத்தப்பட்ட போலி செய்தியை கண்டறியும் முறை இந்தியாவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை