தேர்தலில் தி.மு.க.வை தனித்துவிட சோனியா-கமல்ஹாசன் சந்திப்பா? மு.க.ஸ்டாலின் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
தேர்தலில் தி.மு.க.வை தனித்துவிட சோனியாகமல்ஹாசன் சந்திப்பா? மு.க.ஸ்டாலின் பேட்டி


சோனியாகாந்தியை கமல்ஹாசன் சந்தித்தது வரக்கூடிய தேர்தலில் தி.மு.க.வை தனித்து விடுவதற்காகவா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தி.மு.க. நிர்வாகியின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து, பேசியதாவது:-

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்ததற்குப் பிறகு அதை திசை திருப்புவதற்காக அதை நிறைவேற்ற முன்வராத நிலையிலே குமாரசாமி பேசி வருவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. அதுமட்டுமல்ல, இதே குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பை ஏற்பதற்கு முதல் நாள், இதே ஸ்ரீரங்கத்திற்கு வருகிறார்.

இங்கு வந்து கடவுளை தரிசித்து விட்டு வெளியிலே வந்து, பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொழுது என்ன சொல்கிறார் என்று கேட்டால், கர்நாடக மாநிலமும், தமிழகமும் சகோதரத்துவமாக இருக்கும் என்று ஒரு செய்தியை சொல்லிவிட்டு போகிறார். ஆனால், இதுவரை சகோதரத்துவத்தோடு நடந்திருக்கிறாரா என்றால் இல்லை.

அவர் முதல்-மந்திரி ஆவதற்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கடவுளின் கருணை குமாரசாமிக்கு தேவைப்படுகிறது. ஆனால், முதல்-மந்திரி ஆனதற்கு பிறகு தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையிலே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுடைய ஜீவாதாரத்தை பற்றிக் கவலைப்படாத நிலையிலே தான், கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியினுடைய உணர்வு இருந்து கொண்டிருக்கிறது.

அவர்களாவது அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு இருக்கக்கூடிய ஒரு ஆட்சி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கூட கவலைப்பாடாத நிலையிலே தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம், ஒரு முடிவுகட்ட விரைவிலே நாம் சந்திக்க இருக்கக்கூடிய தேர்தல் மிக விரைவிலே வரத்தான் போகிறது. அப்படி வருகிற நேரத்தில், நீங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல விடிவுகாலத்தை ஏற்படுத்தி தருவதற்கு, அதேபோல, மத்தியிலே மதச்சார்பற்ற ஒரு ஆட்சி உருவாக்கி தருவதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-சேலத்தில் 8 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?

பதில்:-நான் கலந்துகொள்ளவில்லை, அங்குள்ள மூன்று மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். கட்சியினுடைய தலைமைக் கழகத்தின் சார்பாக, துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கிறார்.

கேள்வி:-கமல்ஹாசன், சோனியாகாந்தியை சந்தித்துள்ளார், எனவே, வரக்கூடிய தேர்தலில் தி.மு.க.வை தனித்து விட கமலஹாசனுடன் சந்திப்பு நடந்தது என எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- உங்களுடைய யூகங்களுக்கு, உங்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:-பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நிறைய தீவிரவாத அமைப்புகள் பத்திரிகைத் துறையிலேயே ஊடுருவி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார், அது பற்றி உங்களின் கருத்து?.

பதில்:-இன்றைக்கு இதை சொல்லுகிறார். நாளைக்கு, என்ன சொல்லுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி:-புழல் சிறையில் ஒரு கைதி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர்கள் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறதென்று சொல்லுகிறார்களே?

பதில்:-சிறையிலேயே ஒரு கைதி கொலை செய்யப்படுகிறார் என்றால், சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
 

மூலக்கதை