ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து குவிப்பு வழக்கில் மாஜி அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து குவிப்பு வழக்கில் மாஜி அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

ராஞ்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் துலால் புயானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசிலும், மதுகோடா தலைமையிலான கூட்டணி அரசிலும் அமைச்சராக இருந்தவர் துலால் புயான்.

ஜுக்சலாய் சட்டமன்ற தொகுதியில் இருந்த 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2014 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகி ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியில் இணைந்தார்.

பின்னர் பாஜவில் சேர்ந்தார். அதையடுத்து காங்கிரசில் இணைந்தார்.

இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகாா் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு கடந்த 2013ம் ஆண்டு ராஞ்சி ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்து கடந்த 2014ம் ஆண்டு ராஞ்சி சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. புயானுக்கு எதிராக 21 சாட்சிகளை கோர்ட்டில் சிபிஐ நிறுத்தியது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதி அனில் குமார் அளித்த தீர்ப்பில் புயானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை