உத்தரகாண்டில் யோகா நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரகாண்டில் யோகா நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்

டேராடூன்: சர்வதேச யோகா தினத்தையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் யோகா தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். பிரதமருடன் சுமார் 55 ஆயிரம் பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உடல், மூளை, ஆன்மா ஆகியவற்றை இணைக்கும் கருவியாக யோகா விளங்குகிறது.

உலகிற்கு இந்தியா கொடுத்த பரிசு யோகா. இது, உடல் நலத்துக்கு பாஸ்போர்ட்டாக விளங்குகிறது.

உடலுக்கும், மனதுக்கும் யோகா நன்மை செய்கிறது.

தனிப்பட்ட முறையிலும், சமுதாயத்திலும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தியை யோகா நமக்கு தருகிறது.

யோகாவின் தலைசிறந்த தூதராக இந்தியா விளங்குகிறது. நம்முடைய கலாசாரத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். மும்பையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


.

மூலக்கதை