8 வழி சாலைக்கு எதிர்ப்பு: 7 பேர் தீக்குளிக்க முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
8 வழி சாலைக்கு எதிர்ப்பு: 7 பேர் தீக்குளிக்க முயற்சி

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச்சாலை, தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று காலை, வழக்கம்போல் பலத்த ேபாலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் விளைநிலங்களை அளவீடு செய்யும் பணியை துவங்கினர்.

விவசாயிகளும், கிராம மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கற்களை நட்டனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கொக்கராப்பட்டி கிராமத்தில், செழிப்பான விளைநிலங்களுக்கு மத்தியில் பூட்ஸ் காலுடன் முட்டுக்கற்களை நட்டது விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் இன்று (21ம் தேதி) காலை 6 மணிக்கே, பசுமை வழிச்சாலைக்காக விளைநிலங்களில் கல் நடும் பணியை அதிகாரிகள் துவக்கினர்.

இதற்கு, அதேபகுதியை சேர்ந்த விவசாயி சந்திரகுமார், தனது விளைநிலம் முழுவதும் கறுப்பு கொடிகளை நட்டு வைத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதை பொருட்படுத்தாமல் ேபாலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள், சந்திரகுமாரின் நிலத்தில் அளவிட்டு கற்களை நட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரும், மனைவி மணி, மகன்கள் பாலன், தமிழரசன், மகள் சுபா மற்றும் சந்திரகுமாரின் சகோதரர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய் வோம் என்று கூறினர். அதோடு மண்ெணண்ணெயை உடலில் ஊற்ற முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து கிராம மக்களும் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்கள் திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து சந்திரகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தேன்.

பல தலைமுறைகளாக வசிக்கும் இந்த மண்ணில் வைத்து அவர்களை மணமுடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பசுமை வழிச்சாலைக்காக நிலம் பறிபோவதால், எனது எண்ணத்தில் மண்விழுந்து விட்டது’’ என்று வேதனை தெரிவித்தார். எருமியாம்பட்டியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பல தலைமுறைகளாக மூன்றரை ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து, பிழைப்பு நடத்தி வருகிறோம்.

பசுமை சாலை திட்டம், எங்கள் வாழ்வை வறண்ட பாலையாக்கி விட்டது. எந்த அனுமதியும் இல்லாமல் போலீஸ் படையுடன் நிலங்களில் அத்துமீறி அளவீடு செய்து, கற்களை நட்டு வைப்பது, எங்கள் வாழ்க்கையில் இதுவரை காணாத புதிய அராஜகமாக உள்ளது’’ என்றார்.

இந்த 8 வழி பசுமை விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தின் எல்லை பகுதியான மஞ்சவாடியில் இருந்து அடிமலைப்புதூர், செட்டியார்காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளையம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி பகுதியில் கையகப்படுத்தப்படக்கூடிய நிலத்தினை அளவீடு செய்து எல்லைக்கற்கள் (முட்டுக்கல்) நடும் பணியை மாவட்ட வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி, திடீரென 200க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நிலங்களை அளந்து, எல்லை கற்களை அதிகாரிகள் நட்டனர். இந்த எல்லைக்கல் நடும் பணிக்கு, பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆனால், அவர்களை போலீசார் மூலம் எச்சரித்து அனுப்பிவிட்டு, நன்கு செழித்து காணப்பட்ட விவசாய பயிர்களுக்கு நடுவே அளவீடு செய்து எல்லை கற்களை நட்டனர்.

ஒரு சில விவசாய தோட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விடாப்பிடியாக அங்கு கற்களை நட்ட னர். கடந்த 3 நாளில் 11. 43 கி. மீட்டர் வரை எல்லைக்கல் நடப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் வெள்ளையம்பட்டியில் இருந்து மின்னாம்பள்ளி வரை 206 எல்ைலக்கல் நட்டனர்.

தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மின்னாம்பள்ளி, சுக்கம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நில அளவீடு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நில அளவீடு பணியையொட்டி அந்த பகுதியில் சேலம் மாவட்ட ஏடிஎஸ்பி அன்பு, டிஎஸ்பிக்கள் சூரியமூர்த்தி, சங்கரநாராயணன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

.

மூலக்கதை