தமிழக, புதுவை எல்லையில் உள்ள சாராய கடை ஏலத்துக்கு கடும் கிராக்கி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக, புதுவை எல்லையில் உள்ள சாராய கடை ஏலத்துக்கு கடும் கிராக்கி

புதுச்சேரி: தமிழக, புதுச்சேரி எல்லையில் உள்ள சாராய கடைகளை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியதால் அதிக விலைக்கு ஏலம்போனது.
புதுவையில் 86 சாராயக்கடைகளுக்கான ஏலம் கலால்துறை மூலம் ஆன்லைனில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையர் தயாளன் ஏலம் விடும் பணியை தொடங்கி வைத்தார்.

இதை வடி சாராய ஆலை மேலாண் இயக்குனர் வின்சென்ட் ராயர் தலைமையிலான குழு முன்னின்று நடத்தியது.
முதல் நாளில் சாராயக்கடைகளுக்கு மட்டும் ஏலம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சாராயக்கடைகள் கூடுதல் விலைக்கு ஏலம் போனது.

அதை ஏலம் எடுப்பதில் புதுச்சேரி மற்றும் தமிழக தொழிலதிபர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் சாராயக்கடை ரூ. 20. 63 லட்சம் ஏலம் போனது.

இதற்கு அடுத்தப்படியாக கருவடிக்குப்பம் சாராயக்கடை ரூ. 18. 49 லட்சத்துக்கும் பாகூர் ஆராய்ச்சிக்குப்பம் ரூ. 12,91 லட்சம், குருவிநத்தம் ரூ. 12. 31 லட்சத்துக்கும், அரியாங்குப்பம் சாராயக்கடை ரூ. 8. 67 லட்சத்துக்கும் ஏலம் போனது. நேற்று ஏலம் போன 28 கடைகள் மூலம் புதுவை அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மீதமுள்ள கடைகள் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு மறு ஏலத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. காரைக்காலிலும் நேற்று ஏலம் தொடங்கிய நிலையில் வரவேற்பு இல்லாததால் எந்த கடையும் ஏலம் போகவில்லை.

இதனால் கிஸ்தி தொகையை குறைத்து மீண்டும் ஏலம் விடப்படுகின்றன. இன்று காலை 10. 30 முதல் 11. 30 மணி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள கள்ளுக்கடைகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.

புதுவையில் 63 கடைகள் ஏலம் விடப்படுகின்றன.

இந்தாண்டு கலால்துறை தனது மொத்த வருமானமாக ரூ. 800 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளது.

.

மூலக்கதை