ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவு

புதுடெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இது நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய தகவல்களை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.



13 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதி முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஹர்ஷ வர்தன் கூறினார். அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றனர்.

.

மூலக்கதை