தூத்துக்குடி சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க 28-ந் தேதி முறையிடலாம்

PARIS TAMIL  PARIS TAMIL
தூத்துக்குடி சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க 28ந் தேதி முறையிடலாம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க 28-ந் தேதி முறையிட மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

சி.பி.ஐ. விசாரணை தேவை

சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க.வை சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளும், அன்று பொறுப்பில் இருந்த கலெக்டரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள்.

தங்கள் துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு போலீசார் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்த முடியாது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட்டு தூத்துக்குடி தாக்குதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல தகவல் உரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை ரத்து செய்துள்ள தமிழக அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். எனவே இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அவசர வழக்கு

இந்நிலையில், மனுதாரர் வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய கோடை அமர்வு முன்பு ஆஜராகி, “தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்த போராட்டக்காரர்கள் மீது மீண்டும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இந்த மனுவை அவசர வழக்காக கருதி இன்று (நேற்று) பிற்பகல் 2.00 மணிக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று முறையிட்டார்.

வேறு அமர்வில் முறையிடுங்கள்

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், “இந்த அமர்வு இன்று மாலை முடிவடைவதால் இதனை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. 28-ந் தேதி (திங்கட்கிழமை) வேறு நீதிபதிகளை கொண்ட கோடை விடுமுறை அமர்வு செயல்படும். அந்த அமர்வின் முன்பு மனுதாரர் ஆஜராகி அவசர வழக்காக இதனை எடுத்துக்கொள்ள முறையிடலாம்” என்று தெரிவித்தனர்.

மூலக்கதை