2வது முறையாக தேர்வாகி சாதனை: பாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு

தினகரன்  தினகரன்
2வது முறையாக தேர்வாகி சாதனை: பாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு

கர்நாடகாவின் 15வது  சட்டபேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அவை கூடியதும் தற்காலிக சபாநாயகரான போப்பையா  சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பாஜ சார்பில் இப்பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த சுரேஷ் குமார், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, ஆளும் கா்ங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பில்  மனுதாக்கல் செய்த ரமேஷ் குமாரை முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்மொழிந்தார். அதை துணை முதல்வர் பரமேஷ்வர் வழி மொழிந்தார்.  இதையடுத்து, சபாநாயகராக ரமேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக போப்பையா அறிவித்தார். குமாரசாமியும், எடியூரப்பாவும் அவரை அழைத்து வந்து சபாநாயகர்  இருக்கையில் அமர வைத்தனர். கர்நாடக  சட்டபேரவையில் இதுவரை 22 பேர் சபாநாயகராக இருந்துள்ளனர்.  ஆனால், யாரும் 2வது முறையாக இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது கிடையாது.  அந்த வரலாற்றை முறியடித்து, ரமேஷ் குமார் 2வது முறையாக இப்பதவிக்கு வந்துள்ளார். இதற்கு முன், 1994 முதல் 1999 வரை தேவகவுடா, ஜே.எச்.படேல் முதல்வராக  இருந்தபோது இவர் சபாநாயகராக இருந்தார். இப்போது, 24  ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் சபாநாயகராகி இருக்கிறார்.

மூலக்கதை