ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை

தினமலர்  தினமலர்
ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை

புதுடில்லி : மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அக்., 2ல், ரயில்களில், அசைவ உணவுக்கு தடை விதிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும், மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள், அக்., 2ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, வெகு விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு திட்டமிட்டு, பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மகாத்மா காந்தி, சைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர். இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவரது பிறந்த நாளை, மேலும் சிறப்பிக்கும் வகையிலும், அக்., 2ல், ரயில்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது: மத்திய அரசு, மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக்., 2ல், ரயில் பயணியருக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது. இது, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளிலும் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன் மூலம், ரயில்வே நிர்வாகம் சார்பில், மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளோம்.

மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய டிக்கெட்டுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை