நல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி பேட்டி

தினமலர்  தினமலர்
நல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி பேட்டி

திருச்சி:''நல்ல மழை பெய்ய வேண்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய வந்தேன்,'' என்று குமாரசாமி தெரிவித்தார்.


கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள, மத சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, நேற்று மாலை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.அப்போது, அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி உள்ளது. எனவே, நல்ல மழை பெய்ய வேண்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய வந்தேன். நல்ல மழை பெய்தால், தமிழகத்திற்குரிய தண்ணீரை வழங்கி, சகோதரத்துவத்தை பேணுவோம்.இரு மாநில விவசாயிகளின் நலன் கருதி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் கட்சி, முழு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளதால், ஐந்து ஆண்டுகளுக்கு நல்லாட்சி வழங்குவோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாலை 6:50 மணிக்கு கோவிலுக்கு வந்த குமாரசாமிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 7:45 மணிவரை, பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, தன்வந்திரி பெருமாள் சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.அவர், ரெங்கநாதரை தரிசிக்க சென்ற போது, அங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக, நின்றிருந்த பக்தர்கள், 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுங்கள்' என்று, கோரிக்கை விடுத்தனர். ''ரெங்கநாதர் அருளால், நல்ல மழை பெய்யும்; காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்,'' என்று குமாரசாமி, அவர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக தனி விமானம் மூலம், திருச்சிக்கு வந்த அவர் கூறியதாவது:காவிரி பிரச்னையில், நல்ல தீர்வு ஏற்பட முழு ஒத்துழைப்பு கொடுப்போம். நீதிமன்ற தீர்ப்பை மதித்து, அதை செயல்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.கர்நாடகா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும், மூன்று ஆண்டுகளாக, நீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கின்றன. இரு மாநில விவசாயிகளும் வேதனையில் உள்ளனர். எங்கள் ஆட்சியில் நல்ல நிர்வாகத்தை கொடுத்து, காவிரி பிரச்னைக்கு, தீர்வை ஏற்படுத்துவோம்.
முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மூலக்கதை