கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

தினமலர்  தினமலர்
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

பெங்களூரு : பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என சுப்ரீம் கோர்டில் விடிய விடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் விஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். எடியூரப்பாவின் பதவியேற்பை அடுத்து பா.ஜ., தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் எதிர்க்கட்சிகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பதவியேற்புக்கு பின் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தேதி அறிவிக்கப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது.

மூலக்கதை