கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக சட்டபேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், கவர்னர் யாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்  என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 3 முக்கிய கட்சிகளுமே எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று நடத்துகின்றன.

எம்எல்ஏக்களை இழுக்கும் பணிகள்  தீவிரமடைந்துள்ளதால், மேலும் பலர் கட்சி மாறலாம் என்பதால் தொடர்ந்து கர்நாடகாவில் பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக மாநில சட்டபேரவைக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

பாஜ 104, காங்கிரஸ் 78,  மதசார்பற்ற ஜனதாதளம் 38, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜ 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தனித்து ஆட்சி அமைக்கும்  வகையில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

இருப்பினும் அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரிய கட்சியாக இருக்கும் பாஜவை  ஆட்சி  அமைக்க அழைக்க வேண்டும் என்றும், அதற்காக ஒருவாரம் காலவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் வி. ஆர். வாலாவிடம் மாநில பாஜ  தலைவர் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜ நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.
அதே சமயத்தில் அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் திடீரென கூட்டணி அமைந்துள்ளது.



மஜதவை விட காங்கிரஸ் 40 தொகுதிகளில் அதிகம் வெற்றி பெற்றிருந்தாலும் 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மஜத தலைமையில் ஆட்சி அமைய  முழு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் தலைமை முன்வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் குலாம்நபி ஆசாத், மாநில காங்கிரஸ் தலைவர்  பரமேஷ்வர், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மஜத தரப்பில் குமாரசாமி உள்பட நிர்வாகிகள் நேரி்ல் சந்தித்து பேசினர்.

குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முடிவு செய்து நேற்று ஆளுநர் வி. ஆர். வாலாவை கூட்டாக சந்தித்து ஆட்சி அமைக்க  அழைக்கும்படி கடிதம் கொடுத்தனர். தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜவை ஆட்சி அமைக்க அழைப்பதா? அல்லது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை  கோரியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணியை அழைப்பதா? என்ற குழப்பத்தில் ஆளுநர் வி. ஆர். வாலா  உள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு சட்ட  நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

அதில் சட்டப்படி ஆட்சி அமைக்க தேவைப்படும் 113 எம். எல். ஏக்கள் ஆதரவு யாருக்கு உள்ளதோ அந்த கட்சியை தான் ஆட்சி அமைக்க அழைக்க  வேண்டும். அதன்படி, முதலில் மஜத-காங்கிரஸ் கூட்டணியை தான் அழைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

அதே  சமயத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் கடத்தும்படி பாஜ தரப்பில் ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்து  வருவதாக கூறப்படுகிறது. இதில் ஆளுநர் இன்று என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதியதாக வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏகளின் கூட்டத்தை காங்கிரஸ், மஜத கட்சிகள்  கூட்டியுள்ளன. காலை 9. 30 மணிக்கு பரமேஷ்வர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டமும், குமாரசாமி தலைமையில் மஜத எம்எல்ஏக்கள்  கூட்டமும் நடந்தது.

இதில் இரு கட்சிகள் சார்பில் சட்டமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுத்தனர். புதிய அரசு அமையும் வரை இரு கட்சி  எம். எல். ஏகளையும் ரெசார்ட்டில் தங்க வைக்கும் யோசனை உள்ளதாக தெரியவருகிறது.

எம்எல்ஏக்கள் கூட்டம் பிற்பகலில் முடிவடைகிறது.   அதன்பின்னர், பாஜ திட்டமிட்டுள்ள ஆபரேஷன் தாமரையில் இரு கட்சி எம்எல்ஏக்கள் சிக்கி கொள்ளாமல் தவிர்க்க இந்த முடிவை எடுத்துள்ளதாக  தெரியவருகிறது. இரு கட்சி எம்எல்ஏக்களையும் ஏ. சி.

பஸ்சில் இன்றே கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரெசார்ட் ஒன்றுக்கு அழைத்து செல்ல  ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரியவருகிறது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் ஆட்சியை உறுதி செய்வதில் இருகட்சி தலைவர்களும் தீவிரமாக உள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்த  சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரும் மக்களவை உறுப்பினருமான அகமது படேல், மேலிட பொறுப்பாளர் கே. சி. வேணுகோபால், குலாம்நபி  ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, பரமேஷ்வர் உள்பட கட்சி நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.



இதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சாங்கிரிலா ஓட்டலில் மஜத கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.   அதில் கூட்டணி ஆட்சி அமைப்பது, மஜத அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவதா? வேண்டாமா? ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை  எனில் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர். அமித்ஷாவின் திட்டம் பலன் அளிக்குமா? கர்நாடக பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜவின் அரசியல் சாணக்கியர் என கருதப்படும் அமித்ஷா  சில திட்டங்களை வகுத்து செயல்படுத்த முயற்சித்து வருகிறார். அவருடைய திட்டம் பலன் அளிக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு கர்நாடக அரசியல்  வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வகையில் மெஜாரிட்டி பலம் கிடைக்காத நிலையில் மஜத ஆட்சி அமைக்க  காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

காங்கிரசின் இந்த முடிவு பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்தது என்றாலும் அதை வெளியே காட்டாமல் அக்கட்சி  தலைவர்கள் தங்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

கூட்டணி குறித்து மாநில தலைவர்கள் யாரும் பேசக்கூடாது என்று கடிவாளம் போட்டுள்ள அமித்ஷா டெல்லியில் ரகசிய ஆலோசனை நடத்தி  வருகிறார்.

மாநில தலைவர் எடியூரப்பாவின் மூலம் கவர்னரிடம் ஆட்சி அமைப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று யோசனை  தெரிவித்துள்ள அமித்ஷா, தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மஜதவில் இருந்து தங்களுக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கான முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். இதற்கு வசதியாகவே 7 நாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது என்று மாநில அரசியலில் பரவலாக பேசப்படுகிறது.

கடந்த காலங்களில் பாஜவின் சார்பில்  ஆபரேஷன் தாமரை என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதால் காங்கிரஸ் மற்றும் மஜத  தலைமை உஷார் அடைந்துள்ளது.

எம்எல்ஏக்கள் ‘‘வேறு எங்கும்’’ செல்லக்கூடாது என்று ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் காங்கிரஸ் மற்றும் மஜத வட்டாரத்தின் மூலம்  தெரியவந்துள்ளது.

கவர்னர் வி. ஆர். வாலா, காங்கிரஸ் மற்றும் மஜதவின் கோரிக்கையை ஏற்று ஆட்சி அமைப்பதற்கு உடனடியாக அனுமதி  வழங்கவில்லை என்றால் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆபரேஷன் தாமரை என்ற வலையில் சில எம்எல்ஏக்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது.

மஜத 2 எம்எல்ஏ மாயம் பாஜவுக்கு சுயேட்சை ஆதரவு
மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் காலையில் நடந்தத.

அந்தக் கூட்டத்தில் எம். எல். ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ்  நாதகவுடா பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் சுயேட்சை எம்எல்ஏ ஆர். சங்கர் நேற்று காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று  காலையில் அவர் எடியூரப்பா மற்றும் மாநில தலைவர் ஈஸ்வரப்பாவைச் சந்தித்து பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் ஈஸ்வரப்பாவுக்கு  சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் தனது முடிவை மாற்றி பாஜவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் பல எம்எல்ஏக்களை இழுக்க  பாஜ தீவிரமாக உள்ளதால் மாநிலத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

.

மூலக்கதை