கமாண்டோ படையினர் அதிரடி தாக்குதல் கட்சிரோலியில் நக்சலைட் சாவு எண்ணிக்கை 37 ஆனது

தினகரன்  தினகரன்

கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் கமாண்டோ படை போலீசாருக்கும் இடையே இரண்டு நாட்கள் நடந்த சண்டையின்போது இறந்த நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சிரோலி மாவட்டம், தாட்காவ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போரியா வனப்பகுதியில் நக்சலைட்களுக்கும் கமாண்டோ படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 16 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு கிட்டத்தட்ட 36 மணி நேரத்துக்கு பிறகு ஜிம்லகட்டா தாலூகாவின் ராஜாராம் கன்கில்லா கிராமத்தில் மீண்டும் கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் மேலும் 6 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் கட்சிரோலி அருகே உள்ள இந்திராவதி ஆற்றில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலின்போது படுகாயமடைந்த நக்சலைட்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் இரண்டு நாட்களிலும் நடந்த தாக்குதல்களில் மொத்தம் 37 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பெண் மற்றும் 18 ஆண் நக்சலைட்கள் அடங்குவர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அகேரி தளம் என்ற நக்சலைட் பிரிவின் உயர்மட்ட தளபதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய பெயர் நந்து என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து மொத்தம் 3 தளபதிகள் இந்த தக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மூலக்கதை