பெண்களை காக்கும் வகையில் மகன்களை பெற்றோர் பொறுப்பாக வளர்க்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்

மண்ட்லா: ‘‘பலாத்காரத்துக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்துவிட்டது. பாதுகாப்பான சூழலுக்கு, மக்கள் தங்கள் மகன்களை பொறுப்பானவர்களாக வளர்க்க வேண்டியது முக்கியம்’’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் மத்தியப் பிரதேசம் மண்ட்லா மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராம்நகரில் நேற்று நடந்தது. இதில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மோடி பேசியதாவது: விவசாயத்தில் சுயசார்பு உடையவர்களாக ஆக்குவதற்கான வழிமுறைகளை பழங்குடியின மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பஞ்சாயத்து பிரதிநிதிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதியை நீர்சேமிப்பு தொடர்பான பணிகளுக்கு பஞ்சாயத்து பிரதிநிதிகள் செலவிட வேண்டும். இங்கு பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளதை குறிப்பிட்டார். அப்போது உங்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. உங்களது கோரிக்கைகளை கேட்டு, நடவடிக்கை எடுக்க டெல்லியில் மத்திய அரசு உள்ளது. கொடூர குற்றத்துக்கு மரண தண்டனையை அளிக்கும் விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை அரசின் உறுதியை காட்டுகிறது. பெண் குழந்தைகளின் மதிப்பு, மரியாதையை குடும்பங்கள் உயர்த்த வேண்டும். சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவும் வகையில், மக்கள் தங்கள் மகன்களையும் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.கிராமங்கள் புகையில்லாததாக மாறும்மண்ட்லா மாவட்டத்திற்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ராஷ்டிரிய கிராம சுவராஜ் அபியான் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதுதவிர மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பகுதிகளை முன்னேற்ற அடுத்த 5 ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் பழங்குடியின பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதவிர மனேரி பகுதியில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையம் அமைப்பதற்காக பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: கிராமப்புற வளர்ச்சியை பொருத்தமட்டில் நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இதில் பல குறைபாடுகள் இருந்தன. ஆனால், ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி வெளிப்படையாகவும், உரிய முறையிலும் செலவழிக்கப்படுகிறதா என்பதன் அவசியம் தொடர்பாக மக்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். மகாத்மா காந்தி எப்போதுமே கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் கிராம சுயராஜ்ஜியம் பற்றி வலியுறுத்தி பேசி வந்தார். தற்போது பஞ்சாயத்து அமைப்புகள் மத்திய அரசின் மின் ஆளுமை மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் திறந்த வெளிகழிப்பிடம் இல்லாத பகுதியாகவும், புகையில்லா சமையல் அறை கொண்ட பகுதியாகவும் கிராமங்கள் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை