மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு கோரும் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதுகலை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விதிமுறையில் இந்திய மருத்துவ கவுன்சில் திருத்தம் மேற்கொண்டது.இதை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவ மேற்படிப்புக்கு மாநிலங்களுக்கு என 50 சதவீதம் உள் ஒதுக்கீடு முறையை உறுதி செய்து அதனை மாநில அரசே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், ‘‘இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் தற்போது பிறப்பிக்க முடியாது. இந்திய மருத்துவ கழகத்தின் விதிமுறைகள் அடிப்படையிலேயே மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களின் சேர்க்கை அனைத்தும் நடைபெறும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை