புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து கொள்ளை : அரசு மருத்துவர் உட்பட 4 பேர் கைது!

தினகரன்  தினகரன்

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து வங்கி கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்ட வழக்கில் அரசு மருத்துவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி காவல்துறைக்கு பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடுபோவதாக வந்த புகாரையடுத்து, அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. முதற்கட்டமாக பாலாஜி, ஜெயசந்திரன் ஆகிய இரண்டு பேரை கடந்த 19ம் தேதி சிபிசிஐடி கைது செய்தது. அவர்களிடமிருந்து ஸ்கிம்மர், ஏடிஎம்மில் திருட பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடலூரை சேர்ந்த கமல் மற்றும் சென்னையை சேர்ந்த சியாம் ஆகியோரை சைபர் போலீசார் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக மருத்துவர் விவேக் என்பவருக்கும் ஏடிஎம் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விவேக்கை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் பலர் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதால், கொள்ளை தொடர்பான விசாரணை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை