முன்கூட்டியே விடுதலை கேட்கும் நளினியின் மனு மீது 27-ந் தேதி தீர்ப்பு ஐகோர்ட்டு உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
முன்கூட்டியே விடுதலை கேட்கும் நளினியின் மனு மீது 27ந் தேதி தீர்ப்பு ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்யநாராயணன், ‘சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில், நளினியின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மேல்முறையீடு செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு நிலை குறித்து அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை‘ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதி பிறப்பிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மூலக்கதை