லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் போன்ற அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார் களை சுதந்திரமாக விசாரிக்க, கடந்த 2013-ம் ஆண்டில் லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்த வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகம், ஊழலுக்கு எதிராக தனிநபர்கள் யார் வேண்டுமானாலும், நீதிமன்றங்கள் போன்று செயல்படும் இந்த அமைப்புகளில் வழக்கு தொடரலாம்.

மத்திய அரசு அளவிலான ஊழல் புகார்களை லோக்பால் அமைப்பும், மாநில அரசு அளவிலான ஊழல் புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பும் விசாரிக்கும். வழக்கு விசாரணையில் அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் பதவி பறிப்பு, சம்பளம் நிறுத்தம், பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்தியாவில் இதுவரை 15 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முதன் முதலாக மராட்டிய மாநிலத்தில்தான் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு ராஜஸ்தான், பீகார், கர்நாடகம், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு, தெலுங் கானா, அருணாசலபிரதேசம், திரிபுரா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்னும் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.

எனவே தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துமாறு உத்தரவிடக் கோரி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், வக்கீலுமான அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டே லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு, அது 2014-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் நடைமுறைக்கு வரவில்லை.

மேலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களுக்கு வேண்டுமென்றே போதுமான நிதியை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒதுக் காததால் அந்த நீதிமன்றங்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி மோசமான நிலையில் செயல்படுகின்றன.

நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையிலும் அரசின் ஒவ்வொரு துறையில் இருந்தும் மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும் வகையிலும் மத்தியில் சுய அதிகாரம் பெற்ற லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் சுதந்திரமாக செயல்படும் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 23-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஏன் அவை அமைக்கப்படவில்லை? என்பது குறித்து விளக்கம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு 12 மாநிலங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த மாநிலங்கள் ஒவ்வொன்றின் சார்பிலும் விளக்கம் அளிக்கும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசின் தரப்பில் அரசு வக்கீல் கே.வி.விஜய குமார் ஆஜராகி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பிலான பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் அமைப்பை உருவாக்குவது தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு காத்து இருப்பதாகவும், மத்திய அரசால் நியமிக் கப்படும் லோக்பால் அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு, லோக்பால் என்பதும் லோக் ஆயுக்தா என்பதும் இரு வேறுபட்ட அமைப்புகள் என்று கூறிய நீதிபதிகள், லோக்பால் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ஏன் காத்திருக்க வேண்டும்? என்றும், இந்த விஷயத்தில் சுதந்திரமான முடிவை ஏன் எடுக்க முடியவில்லை? என்றும் கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள்.

அத்துடன், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு இன்றே நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்றும், இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காத மாநிலங்கள் அனைத்தும் ஜூலை 10-ந் தேதிக்குள் அந்த அமைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை குறித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

மூலக்கதை