மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

PARIS TAMIL  PARIS TAMIL
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விருதுநகர் மாவட் டம் அருப்புக்கோட்டை தேவாங் கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி.

இவர் அக்கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் ரீதியான அழைப்பு விடுத்த பிரச்சினையில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்ட போலீசார் இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக, மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்குவர்.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார், இதற்கான நடவடிக்கையை அடுத்த சில தினங்களில் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உயர்மட்ட விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்து உள்ளார். 2 வாரங்களில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அதிகாரி சந்தானம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சந்தானம் இன்று (வியாழக்கிழமை) மதுரை வருகிறார். அவர், பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுடன் நடத்திய செல்போன் உரையாடல் பதிவை ஆய்வு செய்வதுடன், காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளார். எந்த அளவிற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இப்பிரச்சினையில் தொடர்பு வைத்திருந்தனர் என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

சந்தானம் இன்று மாலை அருப்புக்கோட்டை செல்கிறார். அங்கு நாளை (வெள்ளிக்கிழமை) தேவாங்கர் கலைக்கல்லூரியில் விசாரணை நடத்துகிறார்.

இப்பிரச்சினை குறித்து தகவல் தெரிந்தவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தேவைப்பட்டால் விசாரணைக்கு உதவியாக பெண் அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

மூலக்கதை