கணவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பரோல்

தினமலர்  தினமலர்
கணவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பரோல்

சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன்(76), இன்று(மார்ச் 20) நள்ளிரவு 1.35 மணிக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில், ஒரே நேரத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது; சிகிச்சை முடிந்து, நவம்பரில், வீடு திரும்பினார்.

காலமானார்:


இந்நிலையில், மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் இன்று(மார்ச் 20) நள்ளிரவு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

எம்பாமிங்:



அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, எம்பாமிங் செய்வதற்காக போரூர்- ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் முடிந்த பின், சென்னை - பெசன்ட் நகர் வீட்டில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

சசிகலாவுக்கு பரோல்:


கணவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சசிகலா 15 நாள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடம் அவரது வழக்கறிஞர்கள் சுரேஷ், அசோகன் மனு தாக்கல் செய்தனர்.

அஞ்சலி


பெசன்ட் நகரில் வைக்கப்பட்டுள்ள நடராஜன் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு , நாஞ்சில் சம்பத், வைகோ, காங்., தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மூலக்கதை