மக்கள் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது !!!ராகுல்காந்தி குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
மக்கள் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது !!!ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லியில், இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

ராகுல்காந்தி ஆவேச பேச்சு

அன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசினார். பா.ஜனதாவிடம் இருந்து நாட்டை மீட்போம் என்று அவர் முழங்கினார். பல்வேறு மூத்த தலைவர் களும் பேசினர்.

மாநாட்டின் கடைசி நாளான நேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, அவர் பா.ஜனதாவுக்கு எதிராக ஆவேச உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் கேட்டுப்பாருங்கள். தாங்கள் வேலையின்றி இருப்பதாகத்தான் கூறுகின்றனர். இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மக்களின் நம்பிக்கையை மோடி அரசு இழந்துவிட்டது.

திசைதிருப்ப முயற்சி

ஆனால், இந்த உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை பா.ஜனதா திசைதிருப்பி வருகிறது.

தற்போது நடக்கும் குருஷேத்திர போரில், பா.ஜனதா, கவுரவர்களைப் போல், அதிகாரத்துக்காக போராடுகிறது. ஆனால், காங்கிரசோ பாண்டவர்களைப் போல், உண்மைக்காக போராடுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

பா.ஜனதா, ஒரு அமைப்பின் குரலாக இருக்கிறது. ஆனால், காங்கிரசோ, நாட்டின் குரலாக இருக்கிறது. நாட்டுக்காக பேசுகிறது. பா.ஜனதாவை விட காங்கிரசிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பா.ஜனதா தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், அதிகார போதையில் இருப்பவரை பா.ஜனதாவில் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அத்தகைய நபர்களை காங்கிரசில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நிரவ் மோடி

மோடி என்ற பெயரே பெருமுதலாளிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான நெருக்கத்தின் அடையாளமாக மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்களை மோடி அரசு பாதுகாப்பாக வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளையை நடத்திய நிரவ் மோடி, மோடியின் பெயர் கொண்டவர்தான்.

அந்த மோடிக்கு இந்த மோடி, மக்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை கொடுத்தார். அதற்கு கைமாறாக அந்த மோடி, இந்த மோடி தேர்தலை சந்திப்பதற்காக பணம் கொடுத்தார்.

மொழி திணிப்பு

தமிழர்கள் தங்கள் அழகான மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது.

காங்கிரஸ் தவறு செய்யக் கூடியதுதான். ஆனால், பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸ் தவறுகளை ஒப்புக்கொள்ளும். பா.ஜனதா ஒப்புக்கொள்ளாது. பணமதிப்பு நீக்கத்தை தவறு, பேரழிவு என்று உலகமே சொன்னது. ஆனால், பா.ஜனதா ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசாக இருந்தால், அது தவறுதான், தவறை திருத்திக்கொள்கிறோம் என்று கூறி இருக்கும்.

நாமெல்லாம் மனிதர்கள். தவறு செய்வது இயல்பு. ஆனால், மோடியோ தன்னை கடவுளின் அவதாரம், தான் தவறே செய்ய மாட்டோம் என்று நினைத்துக்கொள்கிறார்.

ஒழுக்கம் தேவை

உலகில் தற்போது அமெரிக்க பார்வை, சீன பார்வை என்ற 2 பார்வைகள் தான் இருக்கின்றன. இன்னும் 10 ஆண்டுகளில், இந்திய பார்வையும் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.

கட்சி தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையிலான சுவரை உடைக்க விரும்புகிறேன். கட்சியை திறமையான இளைஞர்களை கொண்டு நிரப்ப ஆசைப்படுகிறேன்.

கட்சியினரிடம் ஒழுக்கம் வேண்டும். கட்சியை வெற்றி பெறச்செய்ய நாம் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

மன்மோகன் சிங்

நேற்றைய மாநாட்டில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசினார். அவர் பேசியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது. தவறான ஆலோசனையுடன் திணிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சரக்கு, சேவை வரியும் சிறுதொழில் துறையை சீர்குலைத்து விட்டன.

காஷ்மீர் பிரச்சினையையும் மோடி அரசு தவறாக நிர்வகித்து வருகிறது. அங்கு நிலைமை நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதிகரித்துள்ளது.

2 கோடி வேலைவாய்ப்பு

விவசாயிகளின் வருமானம், 6 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும் என்று பிரதமர் கூறுகிறார். இது வெறும் வார்த்தை ஜாலம். இதை நனவாக்க முடியாது. 2 கோடி வேலைவாய்ப்புகளை அளிப்பதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, 2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட இதுவரை அளிக்கவில்லை.

சோனியா காந்தி வழிகாட்டுதலில், காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வளவோ செய்துள்ளது. இந்த மாநாடு, நாட்டின் எதிர்கால பாதையை வகுக் கும்.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

தீர்மானம்

ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி கலைக்கப்பட்டது. அதை மீண்டும் மாற்றி அமைக்க ராகுல்காந்திக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், நேற்றைய மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் தாக்கல் செய்த இந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், காரிய கமிட்டி உறுப்பினர்களை ராகுல்காந்தியே தேர்ந்தெடுக்கலாம்.

மூலக்கதை