குஜராத்தில் பட்டேல்கள் மீண்டும் போராட்டம்: 2 பஸ்கள் எரிப்பு, போலீஸ் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத்தில் பட்டேல்கள் மீண்டும் போராட்டம்: 2 பஸ்கள் எரிப்பு, போலீஸ் குவிப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று பட்டேல் இனத்தவர் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். சில இடங்களில் கலவரம் வெடித்தது.

இதில் 2  பஸ்கள் எரிக்கப்பட்டன. கலவரம் பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர் இதர பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் இடஒதுக்கீடு கோரி கடந்த 2015ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம்  நடத்தினர்.

ஹர்திக் பட்டேல் என்ற இளைஞர் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். மாநிலம் முழுவதும் மிகப்பெரிய கலவரம் மூண்டது.

பலர்  உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மாநில பாஜ அரசு போலீஸ் மற்றும் ராணுவ உதவியுடன் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.

ஹர்திக்  பட்டேல் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீண்ட நாள் சிறை வாசத்துக்கு பின்னர் அவர் ஜாமீனில்  வெளியில் வந்தார். பட்டேல் இனத்தவருக்கு சில சலுகைகளை மாநில அரசு அறிவித்தது.

இதற்கு பின்னர் பட்டேல்கள் பெரிய அளவில் போராட்டம்  நடத்தவில்லை. பட்டேல் போராட்டத்துக்கு பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150 தொகுதிகளில் வெற்றி பெற  வேண்டும் என பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இலக்கு வைத்துள்ளார். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாநில பாஜ இளைஞர் அணி  கூட்டம் நேற்று சூரத்தில் நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டேல் இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு  வெளியே  கோஷம் எழுப்பினர். அவர்களை  போலீசார் கைது செய்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போல சூரத் நகரில் பரவியது. சூரத்தில் சுமார் 10  லட்சம் பட்டேல்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஹிராபாக் பகுதியில் 2 பஸ்கள் தீ வைத்து  கொளுத்தப்பட்டன.

பல இடங்களில் போலீசார் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அதிரடி படை போலீசார் களத்தில் இறங்கினர்.   சில இடங்களில் தடியடி நடத்தப்பட்டது.

போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சூரத் போலீஸ் கமிஷனர் சதீஷ் சர்மா தெரிவித்தார்.

கலவரம்  பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

.

மூலக்கதை