அ.தி.மு.க. பொதுக்குழு 15 நாட்களில் கூடுகிறது அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனை

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க. பொதுக்குழு 15 நாட்களில் கூடுகிறது அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனை

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க. கடும் போராட்டத்திற்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைந்ததால் தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகள் தற்போது தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகளே கட்சியை நடத்துவதற்கு ஒப்புதல் பெறும் வகையிலும், தேர்தல் ஆணையத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும் வகையிலும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்னும் 15 நாட்களில் கூட்டப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியை தலைமை கழக நிர்வாகிகளே நடத்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுவாக கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால், கட்சியின் பொதுச்செயலாளர் அனுமதி அளிக்க வேண்டும். பொதுச்செயலாளர் நடத்தாவிட்டால் கட்சி விதிகளின்படி 5-ல் 1 பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழுவை நடத்த அழைப்பு விடுக்கலாம்.

அதன்படி கட்சியின் விதி 32-ன் படி 5-ல் 1 பங்கு உறுப்பினர்களின் கையெழுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. அதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு 15 நாட்களில் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. எங்களை கேட்காமல் இரு அணிகளும் எப்படி இணையலாம் என்று கேட்கிறார். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தால் தான் இரட்டை இலை சின்னத்தை பெறமுடியும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கிப்போய் விடக்கூடாது என்பதற்காக தான் இந்த இணைப்பு அவசியமாக அமைந்தது. தொண்டர்களின் விருப்பத்திற்காகவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவும் தான் இந்த இணைப்பு நடந்தது.

தற்போது இந்த இணைப்பின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னம் பெறப்படும். தற்போதைய பொதுச்செயலாளர் (சசிகலா) கட்சியின் சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாததால் அவரது நியமனம் செல்லாததாகிவிடும். அதுபோல் அவரால் நியமிக்கப்பட்டவர்களின் (டி.டி.வி.தினகரன்) நியமனமும் தானாகவே பறிபோய்விடும்.

இந்த நேரத்தில், ஜெயலலிதாவால் கட்சியின் விதிகளின்படி நியமிக்கப்பட்ட முந்தைய தலைமை கழக நிர்வாகிகளால் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்த முடியும். அந்த வகையில் தற்போது இணைப்பு சாத்தியப்பட்டு உள்ளது. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சிக்கோ, கட்சிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 2007-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். அவரை சசிகலா கட்சியில் சேர்த்தார். தற்போது இரு அணிகளின் இணைப்பின் மூலம் தேர்தல் ஆணையத்தால் தகுதியின்மை காரணமாக சசிகலா, அவரால் நியமிக்கப்பட்ட தகுதியற்றவரின் (டி.டி.வி.தினகரன்) நியமனமும் தானாகவே பறிபோய்விடும் என்பது தான் உண்மை. தனக்கு பதவி பறிபோய்விடும் என்பதாலே தினகரனும், அவரது ஆதரவாளர்களும் கலக்கத்தினால், பயத்தினால் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்.

குறுக்குவழியில் கட்சியை கைபற்ற நினைத்தவர்கள் தான் அவர்கள். பொதுக்குழு சட்டமன்றத்தில் தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கவர்னர் மாளிகை அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாக்கெடுப்பு நடந்தால் 10, 15 வாக்குகள் கூடுதலாக தான் கிடைக்குமே தவிர, குறையாது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வந்த பிறகு அந்த அணியில் இருப்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். இனி கட்சி மன்னார்குடியின் கையில் செல்லாது. ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் தற்போது 3,200 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 5-ல் 1 பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் கடிதம் கொடுக்க இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதையொட்டி அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை