டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் யாகம் வளர்த்து போராட்டம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் யாகம் வளர்த்து நூதன போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகளை இணைத்தல், வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினம் ஒரு போராட்டம் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று 36வது நாளாக போராட்டம் நடந்தது. காலை 10.30 மணியளவில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் யாகம் வளர்த்து, நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, ஈஸ்வரனே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடு என்று கோஷம் எழுப்பினர்.இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வரை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து இந்திய நதிகளையும் இணைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.  காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகிறோம். எங்களை பிரதமர் மோடி கண்டு கொள்ளவே இல்லை. எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையில், மோடியின் எண்ணத்தை மாற்ற, அந்த ஈஸ்வரன் தான் உதவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு யாகம் வளர்த்து போராட்டம் நடத்தினோம் என்றார். விவசாயிகள் நாராயணசாமி, பெரியசாமி ஆகியோர் இன்று 12 வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை