அரசுப் பணியாக செல்லும் போது 5 நட்சத்திர விடுதிகளில் தங்காதீர்கள்... : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

தினகரன்  தினகரன்

டெல்லி: மத்திய அமைச்சர்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதனன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தெரிகிறது. சில அமைச்சர்கள் அரசுப் பணியாக செல்லும் போது ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமே தங்குவது குறித்து கூட்டத்தின் போது பிரதமர் மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அரசுப் பணியாக செல்லும் போது அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இடங்களான அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சகங்களின் கீழ் உள்ள நிறுவனத்தின் வாகனங்களை அமைச்சர்களும், அவர்களது குடும்பத்தினரும் வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி கூட்டத்தில் கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் ஆடம்பரமாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் யாரும் பொதுத்துறையிடமிருந்து எந்த வித சலுகையோ அன்பளிப்புகளையோ  வாங்க கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது ஊழலற்ற அரசு என்ற நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள மேற்கண்ட பல உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அமைச்சர்களுக்கு மோடி விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை