பவானி ஆற்றில் மேலும் 4 தடுப்பணைகள்! - மீண்டும் சீண்டுகிறது கேரளா; தமிழக விவசாயம் பாதிக்கும்

தினமலர்  தினமலர்
பவானி ஆற்றில் மேலும் 4 தடுப்பணைகள்!  மீண்டும் சீண்டுகிறது கேரளா; தமிழக விவசாயம் பாதிக்கும்

பெ.நா.பாளையம்: கேரள, பவானி ஆற்றில், தேக்குவட்டை, மஞ்சக்கண்டியை அடுத்து பாடவயல் என்ற இடத்தில், கேரள அரசு, புதிய தடுப்பணையை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.நான்கு மாதங்களுக்கு முன், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இரு இடங்களில், ஐந்து அடி உயரம், 300 அடி அகலத்தில், இரண்டு தடுப்பணைகளை, கேரள அரசின், சிறு பாசனத்துறை கட்டி முடித்தது.

இவை தவிர, மேலும், நான்கு இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை, கேரள அரசு துவங்கியுள்ளது. இப்பகுதியில், கட்டுமானப் பணிக்குஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.கேரள பவானி ஆற்றில், ஆறு இடங்களிலும் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால், 2 டி.எம்.சி., அளவு, பவானி ஆற்று நீரை கேரளா பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

'இதனால், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும்' என, தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:கடந்த மாதம் பெய்த பருவமழையின் போது மட்டுமே, பவானி ஆற்றில் வெள்ளம் ஓரளவு கரைபுரண்டு ஓடியது. மற்ற நேரங்களில் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. தற்போது, பாடவயல் என்ற இடத்தில், கேரள சிறு பாசனத்துறை, தடுப்பணை கட்டுமானப் பணிகளை துவக்கி, இரண்டு மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், கேரள அரசு, பவானி ஆற்றில் தடுப்பணையைக் கட்டி, நீரை பயன்படுத்த திட்டமிடுவது சட்ட விரோதம்.நான்கு இடங்களில், கேரளா தடுப்பணைகளை கட்டுவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை