சுனந்தா புஷ்கர் வழக்கு போலீசாருக்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
சுனந்தா புஷ்கர் வழக்கு போலீசாருக்கு கண்டனம்

புதுடில்லி, : சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த ஓட்டல் அறைக்கு வைக்கப்பட்ட, 'சீலை' அகற்றுவதில் தாமதம் செய்வதற்காக, டில்லி போலீசாருக்கு, நீதிமன்றம் கண்டனம்தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், மத்திய அமைச்சராக இருந்தவர், சசி தரூர். இவரது இவரது இரண்டாவது மனைவி சுனந்தா புஷ்கர், 2014ல், டில்லியில், ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது, சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த ஓட்டலின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், 'சுனந்தா மறைவைத் தொடர்ந்து, ஓட்டல் அறைக்கு போலீசார் சீல் வைத்தனர்; அது இன்னும் அகற்றப்படவில்லை. இது வரை, அந்த அறையிலிருந்து எந்த ஆதாரமும் கைப்பற்றப்படவில்லை' என்றார்.

டில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், 'சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த அறையில், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்த உள்ளனர். அதனால், அறையின் சீலை அகற்ற அவகாசம் கேட்டு, ஓட்டல் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த மாஜிஸ்திரேட், பங்கஜ் சர்மா, ''ஓட்டல் அறையின் சீலை அகற்ற அவகாசம் வேண்டும் என்றால், அதை முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். ''சீலை அகற்றுவதில் போலீசார் தாமதம் செய்வது ஏன்; இது தொடர்பாக, அடுத்த விசாரணையின்போது, பதில் அளிக்க வேண்டும்,'' என கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.

மூலக்கதை