பன்னீர் அணி கூட்டத்தில் 'மாஜி' மந்திரிகள் மோதல்

தினமலர்  தினமலர்
பன்னீர் அணி கூட்டத்தில் மாஜி மந்திரிகள் மோதல்



அ.தி.மு.க., - பன்னீர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் இடையே, மோதல் ஏற்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., அணிகள் இணைப்பு குறித்து, முடிவு செய்வதற்காக, பன்னீர் அணி நிர்வாகிகள் கூட்டம், நேற்று முன்தினம், சென்னையில், முன்னாள் முதல்வர்
பன்னீர்செல்வம் வீட்டில் நடந்தது. கூட்டத்தில், அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும், பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.முன்னாள் அமைச்சரும், தற்போதைய, எம்.எல்.ஏ.,வுமான
பாண்டியராஜன் பேசுகையில், 'நான் அமைச்சர் பதவிக்காக, இணைப்பில் ஆர்வம் காட்டுவதாக, சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கு பதவி முக்கியமல்ல. ஜெ., கொடுத்த அமைச்சர் பதவி உட்பட, அனைத்து பதவிகளையும் துறந்துவிட்டு, கொள்கைக்காக, பன்னீர்செல்வம் பின்னால் வந்தேன். இணைப்பு இல்லா
விட்டாலும், அவருடன் இருப்பேன்' என்றார்.அப்போது, முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன், 'நீங்கள் மட்டும் தான் பதவியை இழந்தீர்களா; அதை எல்லாம் கூற வேண்டாம். நான், கட்சியில் மூத்தவன். எனினும், பன்னீர்செல்வம் பின்னால் வந்தேன்' எனக்கூற, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின், அமைச்சர்களுடன் பேச்சு நடத்த, மூத்த நிர்வாகிகள் குழுவை நியமித்துள்ளனர். அதில், பாண்டியராஜன் பெயரை சேர்க்கவில்லை. இது குறித்து அவர் கேட்டதும், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி, 'கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. கட்சி கட்டளையை ஏற்க வேண்டும்' என்றார்.
அதற்கு, 'நான் விபரம் தான் கேட்டேன்' என, பாண்டியராஜன் கூற, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, 'இந்த குழு விபரம், வெளியில் அறிவிக்கப்படப் போவதில்லை. நம் சந்தேகங்களுக்கு, அவர்கள் விளக்கம் பெறுவர்' என, பதில் கூற, இருவரும் சமாதானமாகி உள்ளனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை