அரசு நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு போலீஸ் வழக்கு பதிவு: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அதிரடி

தினகரன்  தினகரன்

பெங்களூரு  : கர்நாடக பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது 250  ஏக்கர் அரசு நில முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இம்மாநில அமைச்சர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான  வரித்துறை சோதனை நடத்தியது. இதனால், சித்தராமையா கடும் அதிருப்தியில் இருக்கிறார். வருமான வரி சோதனை செய்யப்பட்ட அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பாஜ ேபாராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இம்மாநிலத்தில் பாஜ முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தபோது, பெங்களூரு, சிவராம காரந்த்  லே அவுட்டில் 250 ஏக்கர் நிலத்தை மாநகர வளர்ச்சி  கழகத்துக்கு ஒப்படைத்ததில் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும்,  சட்டத்திற்கு விரோதமாக முதல்வர் பதவியை பயன்படுத்தி எடியூரப்பா நில விடுவிப்பு செய்ததாக அரசு குற்றம்  சாட்டியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி எடியூரப்பாவுக்கு மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்  நோட்டீஸ் அனுப்ப முடிவு  செய்துள்ளனர்.

மூலக்கதை