கர்நாடகா அணை கட்டலாம்: சுப்ரீம் கோர்ட்

தினமலர்  தினமலர்
கர்நாடகா அணை கட்டலாம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:'காவிரியின் குறுக்கே, மேகதாதுவில், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கர்நாடக அரசு, அணை கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த, காவிரி நடுவர் மன்றம், 2007ல், இறுதித் தீர்ப்பு வழங்கியது; இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதற்கிடையே, காவிரியின் குறுக்கே, மேகதாது பகுதியில், கர்நாடகா அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது; இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்றைய விசாரணையின் போது, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாவது:காவிரியின் குறுக்கே, மேகதாதுவில், கர்நாடகா, தடுப்பணை கட்டுகிறது. இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த அணையை கட்டலாம்;

தேவைப்பட்டால், இதை கண்காணிக்க, தமிழக அரசு குழுவை அமைக்கலாம். இதன் மூலம், கட்டுமான பணி மற்றும் பராமரிப்பில் பிரச்னை ஏற்படாதபடி, இரு மாநிலங்களும் பார்த்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அமர்வு கூறியது.

மூலக்கதை