சமூக நல அமைப்புகளுடன் மத்திய பட்ஜெட் குறித்து அருண் ஜெட்லி ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சமூக நல அமைப்புகளுடன் மத்திய பட்ஜெட் குறித்து அருண் ஜெட்லி ஆலோசனை

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் இறுதிநாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மரபை மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு மாற்றியது. நிதியாண்டின் தொடக்கத்திலேயே பட்ஜெட்டை அமல்படுத்துகிற விதத்தில் பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிற நடைமுறையை, கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை அருண் ஜெட்லி நேற்று தொடங்கினார்.

நேற்று அவர் தலித் மனித உரிமை, உணவு உரிமை, கல்வி உரிமை, பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்புடைமை, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட 20 சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, பொருளாதார விவகாரங்கள் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், குழந்தைகள், பெண்கள் நலத்துறை செயலாளர் ராகேஷ் வஸ்தவா, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைச்செயலாளர் கல்பனா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சமூக நலத்துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படுத்தப்படுகிற பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி, முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்கப்படும் என்று சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் அருண் ஜெட்லி ஒப்புக்கொண்டார்.

குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள், ஊட்டச்சத்து பாதுகாப்பு போன்றவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சமூக நல அமைப்பு பிரதிநிதிகளின் கோரிக்கை விடுத்தன.

பணியிடங்களில் தாய்மாருக்கு உகந்த சூழலை உருவாக்குதல், வேலை வாய்ப்பை பெருக்குகிற விதத்தில் தொழிற்பயிற்சி அளிப்பதை ஒழுங்குபடுத்துதல், தொழிலாளர்களிடையே வெளிப்படையான தன்மையை உறுதி செய்கிற விதத்தில் தொழிலாளர், தொழில் அதிபர்கள் இடையே ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவித்தல், முறைசாரா தொழிலாளர்கள் பிரச்சினைகள், அரசு நிதி உதவி பெறுகிற பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்றவை குறித்து அருண் ஜெட்லியிடம் பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.


.

மூலக்கதை