உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி; ஆதார் கட்டாயமாக்கியது அரசு

தினமலர்  தினமலர்
உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி; ஆதார் கட்டாயமாக்கியது அரசு

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளிடம், சாதாரண கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள், ஆதார் எண்ணை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நகரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,க்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில், 4,000 சதுர அடி வரையிலான குடியிருப்புகள், 2,000 சதுர அடி வரையிலான வணிக கட்டடங்களுக்கு அனுமதி அளிக்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரிய அளவிலான குடியிருப்பு திட்டங்களை மேற்கொள்வோர், வீடு வாங்குவோர் ஆதார் எண் விபரங்களை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், சிறிய அளவிலான கட்டடங்களுக்கு, இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்படாமல் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, கட்டுமான திட்ட அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது.இதில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக, கட்டுமான திட்ட அனுமதி பெறுவோர், விண்ணப்பத்துடன் ஆதார் எண் அளிப்பதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சியில், திட்ட அனுமதி கோரும் விண்ணப்பத்துடன், ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்த உரிய அறிவிப்பு வெளியிட, மாநகராட்சி நிர்வாகத்தை அரசு அறிவுறுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை