முத்தலாக் ஒழிப்பு மசோதா முஸ்லிம் பெண்களுக்கு நிரந்தர விடுதலை தரும் : சிவசேனா கருத்து

தினகரன்  தினகரன்

மும்பை : முத்தலாக் முறையை ஒழிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் முஸ்லிம் பெண்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் என்று சிவசேனா கூறியிருக்கிறது. முத்தலாக் முறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு நிரந்தர முடிவு கட்டும் வகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சம்பவங்களை குற்றமாக கருதும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:முத்தலாக் முறையை தடுப்பது தொடர்பாக மத்திய அரசு மசோதா கொண்டு வந்தால் அது முஸ்லிம் பெண்களுக்கு நிரந்தர விடுதலையை அளிக்கும்.உத்தர பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய பா.ஜ. அரசிடம் போதிய அரசியல் அதிகாரம் இருக்கிறது. ஆனாலும் எதுவும் செய்யவில்லை. மத்திய அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொண்டால் மக்களுக்கு பாஜ அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை