டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை குளிர்கால கூட்டத்தொடரை 14 நாட்கள் நடத்த முடிவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை குஜராத் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, குளிர்கால கூட்டத்தை ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. இதில், டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 நாட்கள் கூட்டம் நடத்தப்படும். வார விடுமுறை தவிர 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார் கூறுகையில், ‘‘கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க, எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் தேதியும் அவை நடைபெறும். அன்றைய தினம் உட்பட அனைத்து நாட்களிலும் எம்பிக்கள் தவறாமல் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்’’ என்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி மாற்றியமைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன், இந்திரா காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் காலகட்டங்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை கூறி உள்ளது. இதைத்தொடர்ந்து, குளிர்கால கூட்டத்தொடரின் தேதி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை