மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும்: குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி உறுதி

தினகரன்  தினகரன்

போர்பந்தர்: ‘‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும்’’ என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14ல் நடக்கிறது. 18ல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் போர்பந்தர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: விவசாயிகளுக்கு சமமாக மீனவர்களும் உழைக்கிறார்கள். விவசாய அமைச்சகம் போல் மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் வேண்டும் என்று முன்பு நீங்கள் கோரிக்கை விடுத்தீர்கள். பிரதமர் மோடியும் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஏன் இன்னும் தனி அமைச்சகம் உருவாக்கவில்லை? உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். அதற்கு நான் உடன்படுகிறேன். உங்களுக்கு இப்போது நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் மீனவர்கள் நலனுக்காக மீன்வளத் துறை அமைச்சகம் தனியாக உருவாக்கப்படும். குஜராத் மீனவர்கள் தற்போது கரையோரத்தில் மீன்பிடிக்க முடியாது. ஆழ்கடல் சென்றுதான் மீன்பிடிக்க முடியும் என்பதை நான் அறிந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் கரையோரத்தில் கடல் மாசுபட்டுள்ளது. இதை செய்தவர்கள் யார்? மீனவர்களா? நிச்சயம் அவர்கள் இல்லை. பிரதமர் மோடியின் நண்பர்களான 10 முதல் 15 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள்தான் இதற்கு காரணம். உங்கள் பணத்தை எல்லாம் எடுத்து அந்த 10 முதல் 15 தொழில் அதிபர்களிடம் பிரதமர் ேமாடி கொடுத்து விட்டார். மீனவ மக்களுக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், மீன் பிடி துறைமுகங்களை சில தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுத்து நன்மை செய்துள்ளார். இந்த தேர்தல் மூலம் 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அப்போது முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை அனைத்தும் உங்களுக்காக திறந்து வைக்கப்படும். அப்போது நீங்கள் ‘உங்கள் மனதை திறந்து பேசுங்கள்’. இப்போது இந்த கதவுகள் அனைத்தும் பணக்காரர்களுக்கு மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குரல் மட்டுமே கேட்கப்படுகிறது. உங்கள் குரல் அரசை எட்டவே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.ரூ.300 கோடி மானியத்தை நிறுத்திவிட்டது பா.ஜ அரசு: ராகுல் பேசும்போது, ‘‘இங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மீனவர்கள் டீசல் வாங்க 25 சதவீத மானியம் வழங்கப்பட்டது. இந்த மானியம் ஆண்டுக்கு வெறும் ரூ.300 கோடிதான் இருந்தது. ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டீசல் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், என்ன ஒரு மந்திரம் பாருங்கள்?. உங்களுக்கு ரூ.300 கோடி ெகாடுக்க முடியாத அவர்கள்தான், நானோ தொழிற்சாலை அமைய ரூ.33 ஆயிரம் கோடியை கொடுத்து இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

மூலக்கதை