முலாயம் சிங் யாதவ் மீது வழக்கு பதிவு செய்ய விஎச்பி வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அண்மையில் தன், 79வது பிறந்த நாளை கொண்டாடிய, சமாஜ்வாதி நிறுவனரும், மாநில முன்னாள் முதல்வருமான, முலாயம் சிங் யாதவ், 1990ல், தான் முதல்வராக இருந்த போது, கரசேவகர்களுக்கு எதிராக, துப்பாக்கி சூடு நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டதாக பேசினார். முலாயமின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அவரை கைது செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் மனு அளித்துள்ளது.இது குறித்து, வி.எச்.பி., அமைப்பின் செய்தி தொடர்பாளர், சரத் சர்மா கூறியதாவது: உ.பி.,யில், கர சேவகர்களுக்கு எதிராக, துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதை, முலாயம் சிங் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லிம்களின் ஓட்டுகளை பெற, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அதே போல், கர சேவகர்களுக்கு எதிராக, முலாயம் சிங் நடந்து கொண்டுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவால், ஹிந்துக்கள் பலர் உயிர் நீத்தனர். அவர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. எனவே, கர சேவகர்களுக்கு எதிராக, துப்பாக்கி சூட நடத்த, போலீசுக்கு உத்தரவிட்ட, முலாயம் சிங் மீது, மாநில அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை