பெண்ணின், 'பர்தா' அகற்றம்: உ.பி.,யில் சர்ச்சை

தினமலர்  தினமலர்
பெண்ணின், பர்தா அகற்றம்: உ.பி.,யில் சர்ச்சை

லக்னோ: உ.பி.,யில், முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண் அணிந்திருந்த, 'பர்தா'வை, போலீசார், கட்டாயப்படுத்தி அகற்றும்படி கூறியதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலியாவில், நேற்று முன்தினம், பா.ஜ., சார்பில் நடந்த, உள்ளாட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த, சாயிரா என்ற பெண், கறுப்பு நிற பர்தா அணிந்திருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் போலீசார், பர்தாவை அகற்றும்படி, சாயிராவை கட்டாயப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, சாயிரா கூறுகையில், ''நான், பா.ஜ., தொண்டர். கிராமத்தில் இருந்து நீண்ட துாரம் பயணித்து, இந்த பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்தேன். பாரம்பரிய முறைப்படி, கறுப்பு நிற பர்தா அணிந்திருந்தேன். ஆனால் போலீசார், அதை அகற்றச் சொல்லி விட்டனர்,'' என்றார்.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வருக்கு யாரும் கறுப்பு கொடி காட்டிவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பெண்ணிடம் பர்தாவை அகற்றும்படி கூறினோம். 'இதை பிரச்னையாக்கி விட்டனர். இதையடுத்து, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.

மூலக்கதை