தி.மு.க.,வுடன் சசி குடும்பம் கைகோர்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
தி.மு.க.,வுடன் சசி குடும்பம் கைகோர்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: ''சசிகலா குடும்பத்தினர், தி.மு.க.,வுடன் கை கோர்த்துள்ளனர்,'' என, அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: அனைவரும் இணைந்து, ஒன்றுபட்ட, அ.தி.மு.க.,வை வழிநடத்தி கொண்டிருக்கிறோம். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கும் போது, யார் வேட்பாளர் என்பதை, தலைமை முடிவு செய்யும். இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, தேர்தல் கமிஷன் கேட்ட ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். பொதுக்குழு உறுப்பினர்களின் ரேஷன் கார்டு எண், 'ஆதார்' எண் என, அனைத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். எனவே, நிச்சயமாக ஆதாரங்கள் அடிப்படையில், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும்.ஜெ., இருந்த வரை, நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ், அ.தி.மு.க.,வினரின் நாடி துடிப்பாகவும், ஜெயா, 'டிவி' இதயமாகவும் இருந்தன.

தற்போது, நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகை, முரசொலியாக மாறி விட்டது. ஜெயா, 'டிவி'யும், கலைஞர், 'டிவி' போல மாறி உள்ளது. எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, எங்களுக்கு எதிரி, தி.மு.க.,வும், அதன் தலைவரும் தான். அவர்களை, எந்த காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை. ஜெ., கஷ்டப்பட்டு ஆரம்பித்த, ஜெயா, 'டிவி'யில், சட்டசபையில் அவரின் சேலையை பிடித்து அவமானப்படுத்திய, தி.மு.க., முன்னாள் அமைச்சர், துரைமுருகனை அழைத்து நேர்காணல் நடத்துகின்றனர்.

கவர்னர் நிர்வாகத்தின் தலைவர். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை, அவர் பயன்படுத்துகிறார் என்றால், அதை, ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள்; 'அரசு சிறப்பாக செயல்படுகிறது' என, அவர் பாராட்டி உள்ளார். இவ்வாறு கூறினார்.

மூலக்கதை