சொத்து பரிவர்த்தனைக்கு ஆதார் இணைப்பு... கட்டாயம்?

தினமலர்  தினமலர்
சொத்து பரிவர்த்தனைக்கு ஆதார் இணைப்பு... கட்டாயம்?

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின், அடுத்த அதிரடி நடவடிக்கையாக, சொத்து பரிவர்த்தனைகள் அனைத்துக்கும், ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்தாண்டு, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இதன்பின், நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் வசூலித்து வந்த பல்வேறு மறைமுக வரிகள் நீக்கப்பட்டு, எளிய வரி விதிப்பு, நடைமுறைக்கு வந்தது.
'அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும்' என, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவை கருத்து தெரிவித்துள்ளன.

மேலும், நாட்டின் பொருளாதார நிலை அடிப்படையில், தர மதிப்பீடு வழங்கும், 'மூடிஸ்' நிறுவனம், சமீபத்தில், இந்தியாவின் தர மதிப்பை உயர்த்தி அறிவித்தது.இந்நிலையில், கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் அசையா சொத்து பரிவர்த்தனைகள் அனைத்துக்கும், ஆதார் அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர், ஹர்தீப் புரி, நிருபர்களிடம் கூறியதாவது:
அசையா சொத்து பரிவர்த்தனைகளுக்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும். ஆதார் எண் கட்டாயமானால், ரியல் எஸ்டேட் துறையில் குவிந்து கிடக்கும் கறுப்புப்பணம் வெளியே வர வாய்ப்பு உண்டாகும்.
பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிப்பது தடுக்கப்படும். ஏற்கனவே, வங்கி கணக்குகளுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, சொத்து பரிவர்த்தனைகளுக்கு ஆதார், கட்டாயம் ஆவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பினாமிசொத்து ஒழிப்பில்பிரதமர் தீவிரம்

பினாமி சொத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, பிரதமர் மோடி பல முறை பேசியுள்ளார். பினாமி சொத்துகள் மீதான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆதார் இணைப்பு இருக்கும் என்பது, அமைச்சர் ஹர்தீப் புரியின் கருத்தில் உறுதியாகி உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கறுப்பு பண முதலைகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

மூலக்கதை