சாலையோரத்தில், 'உச்சா' போன அமைச்சர்

தினமலர்  தினமலர்
சாலையோரத்தில், உச்சா போன அமைச்சர்

மும்பை: சாலையோரத்தில், திறந்த வெளியில், மஹாராஷ்டிர அமைச்சர் சிறுநீர் கழிக்கும், 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்து உள்ளது. மாநில நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ராம் ஷிண்டே, சாலையோரத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது; இது, சமூகதளங்களில் வேகமாக பரவியுள்ளது. அமைச்சரின் செயலுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், நவாப் மாலிக் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் துாய்மை இந்தியா திட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு, துாய்மை இந்தியா திட்டத்துக்கான வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அது செலவிடப்படுவதில்லை. போதிய கழிப்பறைகள் கட்டுவதற்கு மஹாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது: பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து பயணம் செய்து வருகிறேன். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. சோலாபூர் - பார்ஷி இடையே பயணம் செய்தபோது, அங்கு பொதுக் கழிப்பறை இல்லாததால், அவசரம் கருதி, சாலையோரத்தில் சிறுநீர் கழிக்க நேரிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை