அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,131 கோடி: சுசில்குமார் மோடி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,131 கோடி: சுசில்குமார் மோடி தகவல்

பெங்களூரு: அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ. 95,131 கோடி வசூலாகி உள்ளதாக பீகார் துணை முதல்வரும், ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பொருட்களுக்கு 5, 12, 18, 28 சதவீதம் என வரிகள் விதிக்கப்பட்டன.   பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.



இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த முறை நடந்த கவுன்சில் கூட்டத்தில் 213 பொருட்களின் விலை குறைக்கப்பட்டது.

ஓட்டலில் உணவுகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 48 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ. 95,131 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, பீகார் மாநில துணை முதல்வரும், ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழு தலைவருமான சுசில் குமார் மோடி தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 93,141 கோடியாக இருந்தது.

 

ஆகஸ்டில் மாநில அரசுகளின் வருவாய் இழப்பு 28. 4 சதவீதமாக இருந்தது. தற்போது இது 17. 6 சதவீதமாக குறைந்துள்ளது.

இது நல்ல தொடக்கம் என சுசில் மோடி கூறியுள்ளார்.

கடந்தமுறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 213 பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும், வரிகுறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

.

மூலக்கதை