சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பஸ்சில் பயணம்

தினமலர்  தினமலர்
சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பஸ்சில் பயணம்

சென்னை : தீபாவளியை கொண்டாட, சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் ௭ லட்சம் பேர் பயணித்தனர்.

சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து, தஞ்சை, மதுரை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணியரின் வசதிக்காக, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில், நேற்று முன் தினம் மட்டும், ௬,௦௦௦ சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதற்கு முன், 15 மற்றும் 16ம் தேதிகளில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மொத்தம், 5,156 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.சிறப்பு பேருந்துகளில் பயணிக்க, 1.60 லட்சம் பயணிகள் முன் பதிவு செய்தனர். நேற்று முன் தினம் மட்டும் 46,000 முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தீபாவளி முடிந்து, சொந்த ஊர்களுக்கு திரும்ப 84,000 பேர் முன் பதிவு செய்திருந்தனர்.

முன்பதிவு செய்ய முடியாதவர்கள், நேற்று முன் தினம் இரவு, கடைசி நேரத்தில், அவசரமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்கள் என, நேற்று காலை வரை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மொத்தம், 3.60 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு பேருந்துகளில் பயணித்தனர்.

மேலும், ரயில் மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம், 2.5 லட்சம் பேர் வரை, சொந்த ஊருக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது. பேருந்து, ரயில்களில் நீடித்த கூட்ட நெரிசலால், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டனர்.

கடந்த மூன்று தினங்களாக அரசு பேருந்துகளில் மட்டும், 5.50 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணித்துள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் வசதிக்காக, நேற்று முதல், 22ம் தேதி வரை, 3,794 சிறப்பு பேருந்துகளும்; மேலும், இன்று முதல், 22ம் தேதி வரை, 7,043 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனரக வாகனங்கள் மற்றும் நீண்டதுார பயணத்திற்கான அரசு பேருந்துகளின், போக்கு வரத்து நெரிசலின்றி, சென்னை மற்றும் புறநகர் சாலைகள் அனைத்தும், நேற்று இரவு வரை வெறிச்சோடி கிடந்தன.

மூலக்கதை