மோடிக்கு எதிராக சர்ச்சை 'வீடியோ'; சி.ஆர்.பி.எப்., வீரர் கைது

தினமலர்  தினமலர்
மோடிக்கு எதிராக சர்ச்சை வீடியோ; சி.ஆர்.பி.எப்., வீரர் கைது

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்துக்கு எதிராக 'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.

சட்டீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள்(சி.ஆர்.பி.எப்.,) பலியாயினர். அத்தாக்குதலின் போது, சூழ்நிலையை சரியாக கையாளவில்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும், தைரியமுள்ள தலைமை இல்லை என பிரதமர் மோடியையும், சி.ஆர்.பி.எப்., வீரர் பங்கஜ்குமார் என்பவர் விமர்சித்திருந்தார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அவர் மேற்குவங்கத்திலிருந்து வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அசாமில் உள்ள, ஜோர்கட் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பங்கஜ் பேஸ்புக்கில் மீண்டும், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், 'ஓய்வின்றி வேலை செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். சரியான உணவு இல்லை. வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் துவங்கி உள்ளேன்' எனவும், கூறியிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.

இதனையடுத்து, பங்கஜ் மிஸ்ரா மீது பட்டாலியன் கமாண்டர் பெஹ்ரா, ஜோர்கட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பங்கஜ் நேற்று(அக்.,16) கைது செய்யப்பட்டார். அவர் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பங்கஜ், தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை