ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்

தினமலர்  தினமலர்
ரயில் முன், செல்பி எடுத்தால் அபராதம்

பதிந்தா : 'ரயிலுக்கு முன் நின்று, 'செல்பி' எடுப்பவர்கள், இனி, 2,000 ரூபாய் அபராதம் செலுத்துவதுடன், ஆறு மாத சிறைத் தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்' என, வடக்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. விபத்துஇங்குள்ள ரயில் நிலையங்களுக்கு வரும் ரயில்களில் இருந்து இறங்கும் பயணியர், ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுக்கும்போது, விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.இதை தடுக்க, ரயில்களுக்கு முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வடக்கு ரயில்வேயின், ரயில்வே பாதுகாப்பு படையின், பதிந்தா பிரிவு பொறுப்பாளர், யோகேஷ் குமார் தஹியா கூறியதாவது: ரயில்களுக்கு முன் செல்பி எடுக்கக்கூடாது என்பது குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வடக்கு ரயில்வேயின் அனைத்து இடங்களிலும் ரயில் முன் நின்றபடி, செல்பி எடுப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.

வழக்கு பதிவு



தண்டவாளத்தில் செல்பி எடுப்பது அல்லது ரயில் வரும் போது, நடைமேடையின் விளிம்பில் நின்று, செல்பி எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை