பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த 2 மாதங்களாக விலை குறையாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தான் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இரண்டு தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பேட்டி அளித்திருந்தார். தீபாவளிக்கு முன்னர் பெட்ரோல் விலை குறையலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல், நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிகடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என உறுதி அளித்தார்.

அப்போது பெட்ரோல், டீசல் வரி குறித்து அவர் கூறியதாவது.

பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய முடியாது.

இதிலிருந்து கிடைக்கும் வருவாய் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் தான் அதிக வரி விதிக்கின்றன.

வரியை குறைக்க வேண்டும் என்றால் முதலில் எதிர்கட்சி மாநிலங்கள் அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெட்லி கூறினார்.

வடகொரியாவின் தொடர் பிடிவாதத்தால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை குறைக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனால் தீபாவளிக்குள் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

.

மூலக்கதை