திரிபுராவில் ஆர்ப்பாட்டத்தின்போது டிவி நிருபர் அடித்து கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திரிபுராவில் ஆர்ப்பாட்டத்தின்போது டிவி நிருபர் அடித்து கொலை

அகர்தலா : திரிபுராவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, செய்தி சேகரிக்க சென்ற டிவி நிருபர் அடித்து கொல்லப்பட்டார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திரிபுரா மக்கள் முன்னணி அமைப்பினர் மாண்டை பகுதியில், அரசுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆளும் கட்சி தொண்டர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிக்க தனியார் டிவி நிருபர் சாந்தனு(28) என்பவர் சென்றார்.

இந்நிலையில், இருதரப்பு இடையேயான மோதலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கூட்டத்துக்குள் சிக்கிய சாந்தனுவுக்கும் அடி விழுந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரும் அவரை தாக்கியுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த சாந்தனுவை, அகர்தலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டிவி நிருபர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

உயிரிழந்த சாந்தனுவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அசம்பாவிதங்களை தடுக்க சம்பவம் நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை