18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை என்றும் ஐகோர்ட்டு உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை என்றும் ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிடக்கோரி ஏற்கனவே தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கபில்சிபல், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதைதொடர்ந்து 20-ந் தேதி வரை(அதாவது நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை கடந்த 18-ந் தேதி சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கும் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் மற்றும் சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அரிமா சுந்தரமும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதனும், தமிழக கவர்னர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ராகேஷ் திரிவேதியும், மு.க.ஸ்டாலின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அமரேந்தர்சரண் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதன்பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது. அதேபோன்று மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது.

இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக முதல்-அமைச்சர், சபாநாயகர், சட்டசபை செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை